Pages

Thursday, January 10, 2013

ரிசானா நபீக் - மரணித்த மனிதம்

ரிசானா நபீக் விடுதை செய்யப்பட்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பு, ஆசை, வேண்டுகோள், கோரிக்கை, பிரார்த்தனை என்று எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைத்தது வந்த அந்த துயர்ச்செய்தி. கேட்டவுடன் மனத்தின் வலி கண்களில் கசிந்தது. மலரும் முன்னரே கசக்கப்பட்ட மொட்டு. சட்டத்தின் தீர்ப்புகள் நியாயத்தை காக்கின்றனவோ என்னவோ மனிதத்தை கொல்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வறுமையின் பிடியிலிருந்து வாழ்வுதனை மீட்க முயன்று தோற்றுப்போன அந்த உயிரின் வலி சொல்லில் அடங்கும் என்று நான் நினைக்கவில்லை. கடைசிக் கணம்வரை தான் விடுதலையாகிவிடுவேன் என்று எண்ணியிருந்த அந்த மலரின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது என்னவோ “கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும்” என்ற கமலின் வரிகளை நினைவுபடுத்தின. ரிசானாவிற்கான தண்டனை மரணம் என்பதை எந்த ஒரு நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரிசானா செய்ததாக சொல்லப்படும் கொலை, உண்மையானதுதானா என்ற கேள்விக்கு அப்பால் ஒரு கொலைக்கு தண்டனையாக சட்டத்தின் பெயரால் பதில் கொலை செய்தல் என்பதை எந்த மனிதனுமே ஏற்றுக்கொள்ளமாட்டான்.

பொதுவாகவே மரணதண்டனை என்பதில் எனக்கு எப்பவுமே உடன்பாடு இருந்ததில்லை, இருந்தாலும் நோக்கம் கருதி, திட்டமிட்டு, காட்டுமிராண்டிதனமான, இரக்கமற்று, வக்கிரபுத்தியுடன் செய்யப்படும் கொலைக்களுக்கு வேண்டுமானால் மரணம் சில வேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தண்டனையாக இருக்கலாம் என்று எண்ணியதுண்டு. செய்த குற்றமே, இவனுக்கு மரணதண்டனை கொடுத்தால் என்ன என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது, அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் மரணதண்டனையை ஆதரிக்கலாம் போன்றே தோணும்.

அண்மையில் தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பத்தில் அந்த காமுக மிருகங்களை நடு வீதியில் வைத்து    சுடவேண்டும் போலிருந்தது. அப்படியானதுகள் வாழ்வதற்கே தகுதியியற்றவை என்று நினைத்திருந்தேன். அந்த மிருகங்கள் செத்தாலும் சில தாய்மார் அழுவார்கள் என்று எண்ணவே தோன்றவில்லை. அப்படிப்பட்ட மிருகங்களை இந்த பூமிக்கு தந்த அந்த தாய் அழுதேதான் ஆகவேண்டும். அது சரியா, தவறா என்பதை விவாதிக்கவோ , விபரிக்கவோ நான் முற்படவில்லை.

அதேபோல் அஜ்மல் கசாப் இன் மரணம் கூட  , அவனும் அவனின் குழுவினரும் ஆடிய வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளை நினைக்கையில் அவனுக்கான தண்டனை சரி என்றே பட்டது. மரணதண்டனை சரியானதா ? நியாமானதா? மனிதாமிமானமற்றதா? என்ற கேளிவிகளுக்கெல்லாம் அப்பால் குற்றவாளி மீது சட்டப்போர்வைக்குள் நாம் பழிவாங்கத் துடிப்பது கொலை வெறியாக இருக்கையில் மரணதண்டனை என்ற பெயரில் அந்த கொலையைச் செய்கிறோம். அப்படியான பழிவாங்கல்களில் பெரும்பாலனவை அதிகார வர்கங்களுக்கு சார்பானதாகவும், அப்பாவி சமூகத்திற்கு எதிரானதாகவும் அமைந்துவிடுவதால் என்னவோ அத் தண்டனையை மேலும் வெறுத்திருக்கிறேன்.

ஆனால் ரிசானாவின் நிலையோ வேறு , சாட்டப்பட்ட குற்றம் ரிசானாவில் சிறுபிள்ளைத்தனமான,பக்குவம் இன்மையால் ஏற்பட்ட தவறாக கூட இருக்கலாம் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அந்த சகோதரி அறியாமல் செய்த அந்த தவறுக்காக உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவள் என்ற முடிவு தண்டணையானது நியாயமே இல்லை.

ரிசானாவில் கொலையில் இஸ்லாமும், சவுதியின் சட்டங்களும் கண்டனத்துக்குள்ளானதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்கள் அந்த அந்த நாட்டிற்குரியவை. பணபலம், படைபலம் என்றிருக்கும் அமேரிக்கா , அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளின் வேண்டு கோள்களையே நிராகரித்து போதைப்பொருள் கடத்தலுக்காக தூக்கில் போட்ட சிங்கப்பூரை பராட்டுவதா, தூக்கில் போட்டத்தற்காக தூற்றுவதா  என்ற மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் ரிசானாவை தூக்கில் போட்ட நிகழ்விலும் சவுதிக்கு வக்காளத்து வாங்கி அடுத்தவர் சட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பில் நாம் தலையிடக்கூடது என்று மேதாவித்தனம் கதைப்பவர் காண்கையில் பத்திக்கொண்டு வருகிறது.

இந்தியா கசாப்பை தூக்கில் போட்டால், அதற்கு கத்தலாம், கதறலாம், எதிர்ப்பு போராட்டமே நடத்தலாம் அது அத்துமீறலாகாது சவுதி தூக்கிட்டால் மட்டும் பொத்திக்கொண்டு இருக்கவேணும், என்னங்கடா நியாயம்.  உங்களுக்கெல்லாம் நெஞ்சென்று ஒன்று கிடையாதா, அதில் ஈரம் ஒன்று இருக்காதா? ஒரு மரணத்திற்கு ஒரு மார்க்கத்தையே கேள்வி கேட்கமுடியாது,  ஆனால் அந்த மார்க்கத்தின் பெயரால் மனிதத்தை தொலைப்பவர்களை யார் வேண்டுமானும் நிற்க வைத்து கேள்வி கேட்கலாம். இப்படியானவர்களிடம் மார்க்கத்தில் உள்ள நல்ல விடயங்களை தேடினாலும் கிடைக்காது. எந்த மதமும் அன்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு இம்மார்க்கம் மட்டும்  விலக்கல்ல. 

சட்டம், மதம், சமூகம், மனிதம் என்று எந்த கண்கொண்டு பார்த்தாலும் ரிசானா நபீக் மலரும் முன்னே கருக்கப்பட்ட மொட்டுத்தான். அந்த சகோதரியின் உயிர் அமைதியடைய என் பிரார்தனைகள்.நீசர்கள் நிறைந்த இந்த பூமியிருந்து விடுதலையடைந்திருக்கிறாய் சகோதரி, நின்னுயிர் நிம்மதியாய் உறையட்டும்.

நட்புடன் கிஷோக்குமார்.

2 comments:

  1. ரிசானா நபீக் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்ப்பு.. அதில் எந்த சந்தேகமும் இல்லை..அதேநேரம் நமது தாயகப்பகுதிகளில் நாளாந்தம் சிறு மொட்டுகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் அதைப்பற்றியும் நீங்கள் கருத்தில் கொண்டால் நல்லது. நெடுந்தீவு..மண்டைதீவு.. என்று நீண்டு கொண்டே போகிறது... தடுப்பதுக்கு வழி செய்யாவிட்டால் நாளை எமது தாயகத்தில் எமது சகோதரிகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி நண்பா, நிச்சயமாக எல்லா விடயங்களையும் பற்றி கவனம் செலுத்தவேண்டும்.

      Delete

 

Sample text

Sample Text

Sample Text