Pages

Thursday, November 8, 2012

கண்ணைக்குத்தும் கைநீட்டல்கள்.

கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜன் -  சின்மயி விடயமாக  இருக்கட்டும்,தொழிலதிபர்  -கார்த்திசிதம்பரம் விவகாரமாக இருக்கட்டும் அவையனைத்துமே அடுத்தவன் கண்ணைக்குத்தும் அளவிற்கு எல்லை மீறிய கைநீட்டல்களாகவே எண்ணத் தோன்றுகிறது.இதுவரைகாலங்களிலும் ஊடகம்,சமூக வலைத்தளங்கள் என அனைத்திலுமே எல்லை மீறிய நம் கைநீட்டல்கள்,அடுத்தவன் கண்ணை குத்தியிருந்தும்,சட்ட ரீதியான நடவடிக்கைக்குள் போகுமளவிற்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.அதன் விளைவு; ஊடக சுதந்திரம்,அநியாயத்தை தட்டிக்கேட்டல் என்ற போர்வையில் எதிர்ப்படுவோர் எல்லோர் கண்களையும் குத்த ஆரம்பித்தோம்.எதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. அளவிற்கு மீறிய நம் கைநீட்டல்கள் கொண்டு வந்ததுதான் இன்றைய நிலை.

// ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டால் அடங்கிடுவாய் மனிதா //

இதனால் ஏற்படப்போகும் விளைவுகளில் முக்கியமாக,அதிகரிக்க போகும் ஊடகங்களுக்கான அடக்குமுறை  தெளிவாகத் தெரிகிறது.மேற்சொன்ன விவகாரங்களை பலர் அரசியலாக்கியும்,ஆணாதிக்கமாக்கியும்,பெண்ணடிமைத்தனம் பேசியும் தமக்கு பலன்தரக்கூடிய வகையில் பெருப்பித்து தற்காலிக இலாபம் தேடிக்கொண்ட போதிலும்,நீண்ட கால அடிப்படையில்,நாம் தற்காலிக இலாபத்திற்காக பெருப்பித்த இவ் விடயம்,எறிந்த பூமராங் ஆக எம்மையே திரும்பவும் வந்தடையப்போகிறது என்பதை எம்மில் எத்தனை பேர் அறிந்துளர்

சற்று உற்றுப் பார்த்தோமானால் இவ்வாறான நிகழ்வுகள் இன்று புதிதாய் தொடங்கியதல்ல என்பதும், பலகால “ஊடகச்சுதந்திரம்” என்ற நோயின் முற்றிய தாக்கமே இதுவென்றும் தெளிவாக தெரியவரும். முகப்புத்தகம் உட்பட இலத்திரனியல் ஊடகங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை அனைத்திலுமே போட்டுத்தாக்காதவர்கள் என்று இதுவரை எவருமில்லை . அதிகாரத்திலுள்ளவர்,ஆட்சியாளர்கள்,பிரபலங்கள் என்று நீண்டு செல்லும் அந்த நிரல்,மற்றவர் குறைகண்டு இரசித்தல்,சிரித்தல்,மகிழ்தல் போன்ற நம் நற்பண்புகளை காட்டி நிற்கிறது. பரிகசிப்பது,அவதூறு செய்வது பின்னர் மன்னிப்பு,மானநட்டம், என்று எதையாவது செய்து சரிக்கட்டுவது ஊடங்களில் மாத்திரமல்ல எம் அன்றாட வாழ்விலும் நிகழ்வதுதான். நாம் தனிமனிதராய், குழுவாய் செய்வதை ஊடகங்கள் வியாபாரமாய் செய்கின்றன.பிரச்சனை என்று வருகின்ற போது அச்சு ஊடங்கள் அழிக்க முடியாத இலகு ஆதாரமாகிவிடுவதால் எதிர்த்து நின்று அதையும் விளம்பரப்படுத்தி காசு பார்க்கின்றன, இலத்திரனியல் ஊடகங்கள் ஆதாரங்களை அழித்து அமைதியாகிவிடுகின்றன.

எமது ஊடகச் சுதந்திரமானது அடுத்த வீட்டுக்காரனைப்பற்றியோ, அவன் வீட்டு விவகாரங்கள் மற்றும்அவன் சொந்த பிரச்சனைகள்  பற்றியோ எம்வீட்டிலிருந்து கொண்டு பொதுகூட்டமே போடலாம் என்ற நிலையில்தான் இதுவரை இருந்து வந்தது.ஆனால் அண்மைய நிகழ்வுகளில் அடுத்தவீட்டுகாரனைப் பற்றிய நம் நரிக் கரிசனையை அவன் வீடுவரை சென்று காட்டுமளவிற்கு போனதும் பிரச்சனை பூதாகாரமாக்கியதற்கு ஒரு காரணமாகியிருக்கலாம்.

வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் , மலிந்திருக்கும் இலத்திரனியல் ஊடக வாய்ப்புகள் என அனைத்துமே எம்மை அடுத்தவன் படுக்கையறைக்குள் கமேரா வைக்குமளவிற்கு கொண்டு போயிருக்கிறது.எமது பரபரப்புப் பசிக்கு தீனி போட அடுத்தவன் படுக்கையறை வரை செல்ல துணிந்து விட்டோம். எமக்கு தேவையான பரபரப்பு,சுவாரசியம் ஒரு நோயாகவே எம்முள் வளர்ந்து விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கட்டும்,இலத்திரனியல் ஊடங்களாக இருக்கட்டும் நிறையவே சுதந்திரம் தந்திருக்கிறது.அவற்றை சரியாக பயன்படுத்தாவிட்டிருந்தாலும் பரவாயில்லை,பிழையாக பயன்படுத்தி எம் தலையில் நாமே மண்வாரிக்கொண்டோம் என்பதை,நாளை அதிகார அடக்குமுறைகள் எமக்கு உணர்த்தி நிற்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

“ஊடகச்சுதந்திரம்” என்ற நோயிற்கு  அடக்குமுறை வைத்தியம் பார்க்க நீண்ட நாட்களாகவே காத்திருந்த அதிகார பைத்தியங்களுக்கு நாமே கதவு திறந்து விட்டுள்ளோம் என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயம். இனி வரும் காலங்களில் கண்ணைக்குத்தும் கைகள் மட்டுமல்லாமல்  நீட்டப்படும் கைகள் அனைத்துமே வெட்டப்படும் என்பதே உறைக்கும் உண்மை.

நட்புடன்
கிஷோக்குமார்.

0 comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text