Pages

Thursday, November 8, 2012

கண்ணைக்குத்தும் கைநீட்டல்கள்.

கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜன் -  சின்மயி விடயமாக  இருக்கட்டும்,தொழிலதிபர்  -கார்த்திசிதம்பரம் விவகாரமாக இருக்கட்டும் அவையனைத்துமே அடுத்தவன் கண்ணைக்குத்தும் அளவிற்கு எல்லை மீறிய கைநீட்டல்களாகவே எண்ணத் தோன்றுகிறது.இதுவரைகாலங்களிலும் ஊடகம்,சமூக வலைத்தளங்கள் என அனைத்திலுமே எல்லை மீறிய நம் கைநீட்டல்கள்,அடுத்தவன் கண்ணை குத்தியிருந்தும்,சட்ட ரீதியான நடவடிக்கைக்குள் போகுமளவிற்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.அதன் விளைவு; ஊடக சுதந்திரம்,அநியாயத்தை தட்டிக்கேட்டல் என்ற போர்வையில் எதிர்ப்படுவோர் எல்லோர் கண்களையும் குத்த ஆரம்பித்தோம்.எதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. அளவிற்கு மீறிய நம் கைநீட்டல்கள் கொண்டு வந்ததுதான் இன்றைய நிலை.

// ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டால் அடங்கிடுவாய் மனிதா //

இதனால் ஏற்படப்போகும் விளைவுகளில் முக்கியமாக,அதிகரிக்க போகும் ஊடகங்களுக்கான அடக்குமுறை  தெளிவாகத் தெரிகிறது.மேற்சொன்ன விவகாரங்களை பலர் அரசியலாக்கியும்,ஆணாதிக்கமாக்கியும்,பெண்ணடிமைத்தனம் பேசியும் தமக்கு பலன்தரக்கூடிய வகையில் பெருப்பித்து தற்காலிக இலாபம் தேடிக்கொண்ட போதிலும்,நீண்ட கால அடிப்படையில்,நாம் தற்காலிக இலாபத்திற்காக பெருப்பித்த இவ் விடயம்,எறிந்த பூமராங் ஆக எம்மையே திரும்பவும் வந்தடையப்போகிறது என்பதை எம்மில் எத்தனை பேர் அறிந்துளர்

சற்று உற்றுப் பார்த்தோமானால் இவ்வாறான நிகழ்வுகள் இன்று புதிதாய் தொடங்கியதல்ல என்பதும், பலகால “ஊடகச்சுதந்திரம்” என்ற நோயின் முற்றிய தாக்கமே இதுவென்றும் தெளிவாக தெரியவரும். முகப்புத்தகம் உட்பட இலத்திரனியல் ஊடகங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை அனைத்திலுமே போட்டுத்தாக்காதவர்கள் என்று இதுவரை எவருமில்லை . அதிகாரத்திலுள்ளவர்,ஆட்சியாளர்கள்,பிரபலங்கள் என்று நீண்டு செல்லும் அந்த நிரல்,மற்றவர் குறைகண்டு இரசித்தல்,சிரித்தல்,மகிழ்தல் போன்ற நம் நற்பண்புகளை காட்டி நிற்கிறது. பரிகசிப்பது,அவதூறு செய்வது பின்னர் மன்னிப்பு,மானநட்டம், என்று எதையாவது செய்து சரிக்கட்டுவது ஊடங்களில் மாத்திரமல்ல எம் அன்றாட வாழ்விலும் நிகழ்வதுதான். நாம் தனிமனிதராய், குழுவாய் செய்வதை ஊடகங்கள் வியாபாரமாய் செய்கின்றன.பிரச்சனை என்று வருகின்ற போது அச்சு ஊடங்கள் அழிக்க முடியாத இலகு ஆதாரமாகிவிடுவதால் எதிர்த்து நின்று அதையும் விளம்பரப்படுத்தி காசு பார்க்கின்றன, இலத்திரனியல் ஊடகங்கள் ஆதாரங்களை அழித்து அமைதியாகிவிடுகின்றன.

எமது ஊடகச் சுதந்திரமானது அடுத்த வீட்டுக்காரனைப்பற்றியோ, அவன் வீட்டு விவகாரங்கள் மற்றும்அவன் சொந்த பிரச்சனைகள்  பற்றியோ எம்வீட்டிலிருந்து கொண்டு பொதுகூட்டமே போடலாம் என்ற நிலையில்தான் இதுவரை இருந்து வந்தது.ஆனால் அண்மைய நிகழ்வுகளில் அடுத்தவீட்டுகாரனைப் பற்றிய நம் நரிக் கரிசனையை அவன் வீடுவரை சென்று காட்டுமளவிற்கு போனதும் பிரச்சனை பூதாகாரமாக்கியதற்கு ஒரு காரணமாகியிருக்கலாம்.

வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் , மலிந்திருக்கும் இலத்திரனியல் ஊடக வாய்ப்புகள் என அனைத்துமே எம்மை அடுத்தவன் படுக்கையறைக்குள் கமேரா வைக்குமளவிற்கு கொண்டு போயிருக்கிறது.எமது பரபரப்புப் பசிக்கு தீனி போட அடுத்தவன் படுக்கையறை வரை செல்ல துணிந்து விட்டோம். எமக்கு தேவையான பரபரப்பு,சுவாரசியம் ஒரு நோயாகவே எம்முள் வளர்ந்து விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கட்டும்,இலத்திரனியல் ஊடங்களாக இருக்கட்டும் நிறையவே சுதந்திரம் தந்திருக்கிறது.அவற்றை சரியாக பயன்படுத்தாவிட்டிருந்தாலும் பரவாயில்லை,பிழையாக பயன்படுத்தி எம் தலையில் நாமே மண்வாரிக்கொண்டோம் என்பதை,நாளை அதிகார அடக்குமுறைகள் எமக்கு உணர்த்தி நிற்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

“ஊடகச்சுதந்திரம்” என்ற நோயிற்கு  அடக்குமுறை வைத்தியம் பார்க்க நீண்ட நாட்களாகவே காத்திருந்த அதிகார பைத்தியங்களுக்கு நாமே கதவு திறந்து விட்டுள்ளோம் என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயம். இனி வரும் காலங்களில் கண்ணைக்குத்தும் கைகள் மட்டுமல்லாமல்  நீட்டப்படும் கைகள் அனைத்துமே வெட்டப்படும் என்பதே உறைக்கும் உண்மை.

நட்புடன்
கிஷோக்குமார்.

Tuesday, November 6, 2012

வெற்றிக் ‘கேடயம்’ ஆகட்டும்.

வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில்  நேற்று மாலை இடம்பெற்ற ‘கேடயம்’ விளையாட்டு சஞ்சிகையின் கொழும்பிற்கான அறிமுகவிழாவிற்கு சென்றிருந்தேன். மூத்த,முக்கியமான ஊடகவியளாலர்கள் சிலர் கலந்து சிறப்பித்திருந்தனர். சஞ்சிகை அறிமுக விழா நன்றாக இருந்தது. மிகச்சின்னதான ஆரம்பக்கட்ட குறைகள் , ஆர்வக் கோளாற்றுத்தவறுகள் என்பன இருந்தாலும்  சகோதரன் வரோதயனின் தனிமனித முயற்சியாக காண்கையில் ‘கேடயம்’ நன்றாகவேயிருக்கிறது. அவர் மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்.

இணையத்திலிருந்து எடுக்காமல் ,சஞ்சிகைக்காகவே கட்டுரைகள் ஆக்கங்கள் உருவாக்கப்பட்டன என்பதை சகோதரன் வரோதயன் சொல்கையில் மகிழ்சியாகவிருந்தது. அதிலிருக்கும் சிரமங்கள்,துன்பங்கள் நன்கறிவேன்.  எங்கள் பள்ளிக்காலங்களில் தகவல்கள் , செய்திகள் , விபரங்கள் என என்ன நல்லது கெட்டது ஆகிலும் அச்சு ஊடகங்களையே நம்பியிருந்தோம். அதனால் எம்மில் அனைவருக்குமே வாசிப்பு பழக்கம் வளர்ந்தது. ஆனால் இன்றோ அப்படியில்லை. குறிப்பாக இன்றைய சந்ததியினர் எல்லாவிடயங்களையும் இலத்திரனியல் ஊடகங்களில் மிக வேகமாகவும், மலிவாகவும் , சுருக்கமாகவும் அறிந்து விடுகின்றனர்.  அதை மீறி அவர்கள் அச்சு ஊடகங்களில் ஆர்வம் காட்டுவதில்லை, அப்படியே சிலர் ஆர்வம் காட்டினாலும் அவையும் இணையத்திலிருந்து பிரதி பண்ணியவைகளாகவே இருக்கின்றன. இளையவருக்கு  இணையத்தில் கிடைக்காத விடயத்தை அச்சு ஊடகத்தில்கொடுப்பதினூடாக குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை சிறிதளவுவேனும் அதிகரிக்கலாம்.  முக்கியமாக வாசிப்பது என்றாலே சற்று தள்ளி நின்று வியாக்கியானம் கதைக்கும் என்னோடிருப்பவரே  ‘கேடயம்’ வாசிப்பதைக்கண்டேன். அந்த வகையில் அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டும் விளையாட்டுத்துறையினூடாக வாசிப்பும் வளரும் என்றால் நிச்சயம் இரட்டிப்பு  மகிழ்ச்சியே.

விழாவிற்கான நிகழ்ச்சி தொகுப்பை செய்திருந்த சகோதரி தன் குரல் உரப்பை சற்று குறைத்திருக்கலாம். நிகழ்வின் முக்கால் பாகம் வரையில் அவரின் அறிவிப்புகள் அலறலாகவேயிருந்தன.  வழமை போல் ஒலிவாங்கி கையில் கிடைத்தால் சலிப்படைய வைப்பதற்கு ஒருவர் இருந்தார் ,நிகழ்வு அந்த குறையையும் வைக்கவில்லை. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், விழாவிற்கு அழைத்ததிற்காக அறுத்துவிட்டுப்போனார். மற்றப்படி சிறப்பு விருந்தினராக வந்தவர்களில் இலங்கை மகளீர் வலைப்பந்தாட்ட அணித்தலைவி ‘உயர்ந்த வனிதை’ தர்ஜினியின் “பிள்ளைகளை விளையாட விடுங்கள்” என்ற பெற்றோர்களுக்கான வேண்டுகோளும், யாழ் இந்துவின் முன்னால் பிரதி அதிபர் ஓங்காரமூர்த்தி ஆசிரியர் “கணத்தில் முடிவெடுக்கும் திறன் தரும் விளையாட்டு” என்பன முக்கியமாகப்பட்டன. வழமை போல தன் பேச்சு வளத்தால் கட்டிப்போட்ட  A.R.V.லோஷன் சொன்ன சினிமா மோகத்துள் புதையும் பிள்ளைகளை கண்டுகொள்ளாத பெற்றோர்,  விளையாட்டு மோகத்தினைமட்டும் ஏனோ மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டியதே.

வாசிப்பதே இல்லை , அதுவும் காசு கொடுத்து வாங்கி வாசித்தல் என்பது சந்தைப்படுத்தல் தடையாகவேயிருக்கும். சுய திருப்திக்காகவன்றி வர்த்தரீதியாக இலாபம் கண்டு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுதல் என்பது சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நட்புடன்
கிஷோக்குமார்..


Sunday, November 4, 2012

வழக்கு எண் :18/9

வறுமை போக்க , வயிற்றுப்பசி தீர்க்க வழி தெரியாத பெற்றோர் நிலை கண்டு இரங்கும் குழந்தை, தொழிலாளியாக மாறுகிறான். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் அத்தனையும் ஆசைகளும் பறிக்கப்பட்டு , வயசு கனவுகளை கருக்கிவிட்டு வேலைக்கு போகுமொரு கட்டாயம். எப்படியிருக்கும் அந்த பிஞ்சு மனதின் நிலை. விபரம் தெரியாத வயதில் கல்வியை உதறிந்துவிட்டு தன்னை சார்ந்தவர்களுக்கு அரை வயிறு கஞ்சியாவது ஊற்றமுடியாதா என்ற ஏக்கத்தோடு வேலைக்குச்செல்லும் அந்த பிஞ்சுக்கு மிஞ்சுவது என்னவோ ஏமாற்றந்தான். குழந்தைகளை தொழிலாளர்கள் ஆக்குவதே குற்றம் என்றிருக்கும் சட்ட நிலையில், அவர்களை மனிதர்கள் என்று கூட எண்ணாத அரக்கர்கள் பார்க்கையில் பதைக்கிறது மனசு. அரை வயிற்றிற்கு  கூட  சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கும் மிருகங்கள் மேல் கோவப்படுவதோடு மட்டும் நின்றுவிடலாகாது என்றே எண்ணத்தொன்றுகிறது. காசை மட்டுமே கணக்கு பார்க்கும் அரக்கர் கூட்டம் அந்த பிஞ்சுக்குள்ளும் ஒரு நெஞ்சிருக்கிறது என்பதை மறுத்தே  விடுகின்றன.

இன்னொரு புறம் பணம்,பதவி , பகட்டு இதெல்லாவற்றையும் வைத்து பண்ணக்கூடாதது எல்லாத்தையும் பண்ணும் ஒரு கூட்டம். ஏழை ஏழையாகவே வாழ்ந்து சாகிறான் என்பது மனித சமூதாய கட்டமைப்பில் இல்லாத சமநிலையை காட்டுகிறது.பணம் வேண்டியதெல்லாத்தையும் தரும் என்பதிலும் வேண்டாத எல்லாவற்றையும் கொண்டு வரும் என்பது ஒரு படி மேல்.

பிள்ளை ஒன்றை நல்லபடி பெற்று, வளர்த்து , வாழவைப்பது என்பது எவ்வளவு கடினமானது. அதிலும் இந்த நவ நாகரீகமான நகர வாழ்க்கை நரகமாகவேயிருக்கிறது. சிலர் நினைக்கிறோம் பெண்பிள்ளை என்றால்தால் பிரச்சனை , ஆண் பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்று , ஆனால் அப்படியல்ல பிள்ளைகள் எதுவென்றாலும் பிரச்சனை என்பது பொதுவானது.வருகிற பிரச்சினைக்கு ஆண் பிள்ளை , பெண் பிள்ளை என்கிற வேறுபாடு கிடையாது , பிரச்சனையின் வடிவங்கள் , வகைகள்  வேறாயிருக்கும் அவ்வளவே.

பிள்ளைகளால் பெற்றோர் எதிர்நோக்கும் பிரச்சனை என்றுமட்டுமல்லாமல் , பிள்ளைகளை விளங்கிகொள்ளாத , அல்லது விளங்கிகொள்ள விரும்பாத பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பிரச்சனையே, ஆக இது ஒரு சமூக சங்கிலியாக இருக்கிறது. வேலைப்பழு , நேரமின்மின்மை , பணப்பற்றாக்குறை போன்றவற்றால் அல்லாடும் பெற்றோரின் பிள்ளைகள் எதிர்கொள்வது ஒருவகை என்னில் , அளவுக்குமீறிய செல்வம் , செல்லம் என செல்வந்த பிள்ளைகளை வந்து சேரும் பிரச்சனைகள் வேறு . ஒட்டு மொத்தத்தில் நமது குடும்ப நிலமை, நிலவரம் எப்படியிருக்கிறது என்பதையும் தாண்டி பிரச்சனையுண்டு என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

அந்த வகையில் சமூகத்தின் அனைத்து மட்டத்திலானவர்களினது வாழ்வியலையும் இரண்டரை மணி திரையுள் கொண்டுவரமுடியாவிட்டாலும் . நான்கு விதமான சமூக மட்டத்தினை எடுத்து அவர்களுக்குரித்தான பிரச்சனை காரணிகளில் சிலவற்றை மாத்திரம் தெளிவாக அலசி எந்த குழப்பமும் இல்லாமல் எங்கள் பார்வைக்கும் தந்த இயக்குநருக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டும். இயக்குநர் பலாஜி சக்திவேல் இதற்காக எடுத்துக்கொண்ட காலம் அதிகமாகயிருந்தாலும் கடைசியில் தந்தது என்னவோ நல்ல பொருள்தான். தயாரிப்பாளர் லிங்குசாமியின் படைப்புகள் வர்த்த ரீதியில் வென்றனவோ இல்லையோ என் போன்றவர்களின் மனங்களை வெல்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த படமும்.

நீண்ட நாட்களின் பின் யதார்தம் தழுவிய படமொன்று பார்த்த மகிழ்ச்சி.

நட்புடன்
கிஷோக்குமார்.



Saturday, November 3, 2012

எனக்கும் தமிழில் தட்டச்ச தெரியும்.. நானும் blogger ஆகிவிட்டேன்.

// தமிழில் தட்டச்ச முடிந்த ஒரே தகுதிக்காக , நாங்களும் Blogger என்று சொல்லித்திரியும் நாதாரி நாய்கள் பற்றி என்ன சொல்வது ? //

நேற்று முகப்புத்தகத்தில் பதிந்த நிலைப்பாடு என்னையும் ஒரு blogger ஆக்கியிருக்கிறது. முதல்வன் படத்தின் கடைசி கட்டத்தில் நாயகன் அர்ஜீன் வில்லன் ரகுவரனை கொன்ற பின் ’என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டியே’ என்பது போல் ஆகிவிட்டது நிலமை.

சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான எனது சஞ்சரிப்பும் , பல வாத பிரதி வாதங்களின் பங்களிப்பும் , பார்வையிடலும்  ஏதாவது எழுத வேண்டும் என்ற தேவைக்கு என்னையும் கொண்டு வந்திருக்கிறது. நல்ல இலக்கியம் கற்றுக்கொண்டோ , இலக்கணம் தெரிந்து கொண்டோ எழுதவில்லை. தமிழை வளர்க்கிறேன் , வளைக்கிறேன் என்று சபதமிட்டுக் கொண்டும் இந்த வலைப்பதிவில் இறங்கவில்லை. ஏதோ எனக்கு தெரிந்தது தமிழ் தட்டச்சல் மாத்திரமே.  எழுத்துக்களை கோர்த்து சொற்களாக்கிய  வாக்கியங்களை பந்தியாக்கி நானும் எழுதலாம் என்றிருக்கிறேன். வாசிப்பதற்கு ஆள் இருக்கிறதோ இல்லையோ என் திருப்திக்காக எழுதலாம் என்ற தெளிவுடனே எழுத தொடங்குவதால் , வாசகர் பார்வை எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணந்தான் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கில்லை.

அடிக்கடி நான் , எனது என்று எழுதுவது மமதையாலோ , சுயநல நோக்கிலோ இல்லை , நாம் என்று என்று நல்ல விடயங்களுக்கு சொல்லிக்கொள்ளலாம் , மற்றப்படி எனது கருத்துகளுக்கோ சிந்தனைகளுக்கோ மற்றவர்களை மாட்டிவிடக்கூடாது என்பதற்காகவேயன்றி வேறேதுமில்லை. இப் பதிவுலகிற்கு எழுதுவதில் புதியவனாக இருந்தாலும் வாசிப்பதில் மிக பழையவன் என்பதான் , இங்கே நடக்கும் சண்டைகள் சச்சரவுகள் , அரசியல்களில் இருந்து விலகியே இருக்க ஆசைப்படுகிறேன். யாரோடும் சண்டை சச்சரவுகளுக்கு போகாமல் , யார் மனதையும் நோகடிக்காமல் எழுத வேண்டும் என்றே ஆசை. கருத்து மோதல்கள் இருக்கலாம் அந்த கருத்துடையவருடனான மோதலாக அது இருக்ககூடாது என்றே நினைக்கிறேன். ஆனால் கருத்தையும் , கருத்தாளனையும் பிரித்து பார்ப்பது என்பது என்னவோ கடினமானதுதான்.

முடிந்த வரையில் தமிழை தமிழ் எழுத்துகளிலும்,வேற்று மொழிச் சொற்களை அம்மொழி எழுத்துகளிலும் எழுதுவதற்கு முயற்சிப்பதாய் உத்தேசம். ஆனால் இன்று வேற்று மொழிச் சொற்களை இனங்காண முடியாதளவிற்கு அவை எம்மொழியோடு இரண்டற கலந்து விட்டது என்பதையும் ,அதை பிரித்தறிவதில் உள்ள சிரமங்களையும் நன்கறிவேன்.

நட்புடன்
கிஷோக்குமார்.


 

Sample text

Sample Text

Sample Text