பெண்பாலர் பாலியல் சார் சர்ச்சைகளில் சிக்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது பாலியல் ரீதியில் மட்டுமே வரவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா ? மனம் மறுதலிக்கிறது எதைச்சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.முக்கியமாக பெண்கள் சார்பான எம்முடைய எல்லா பார்வையுமே அழகு, கவர்ச்சி, ஆபாசம் என்று ஏதோவொரு வகைக்குள் அடக்கப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியதே. எல்லாவற்றையும் பாலியல் தொடர்புடன் பார்க்கும் எம் சமூகத்தின் அக்கறை சரியென்று தோன்றவில்லை. வெறுப்பைத்தரும் சமூக பிறழ்வு என்றே எண்ணத்தோன்றுகிறது.
இன்றைய இந்த சமூகப்பிறழ்விற்கு ஊடகம் என்ற சதிவலையமைப்புதான் மிக முக்கியமான காரணமாகிறது, ஊடகங்கள்தான் இந்த மாதிரியாக தோற்றப்பாடை முற்றிலுமாக உருவகித்து நிற்கின்றது, என்கிற எம்மிடையேயான குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறேன். எத்தனையோ எம் தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களில் கூட எம்மை சுற்றி இருக்கிற சமூகம், உறவினர்களாகவிருக்கட்டும் , நண்பர்களாகவிருக்கட்டும் எத்தனை விதமாக கதைத்திருக்கிறார்கள் என்பதை நான் அனைவருமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் உணர்ந்திருப்போம். ஏன் நாம் கூட எந்த விதமான குற்றவுணர்வும் இல்லாமல் , அதன் தாக்கம் எந்தளவில் இருக்கும் என்றில்லாமல் எத்தனையோ விடயங்களை எந்தவொரு ஆதாயமும், ஆதாரமும் இல்லாமல் கதைத்திருப்போம். அப்படிருக்கையில் எமக்கு பிடித்த அந்த விடயத்தை அல்லது நாம் தனி மனிதராக, சிறு சமூகமாக செய்யும் அந்தச் செயலை பெரியளவில் செய்து காசு பார்க்கும் ஊடகங்களை குற்றம் சொல்லும் உரிமை எமக்கில்லை என்றே எண்ணுகிறேன்.
முக்கியமாக பெண்பாலர் பற்றி பேசும் போது நாம் எதைப்பற்றியுமே யோசிப்பதாக எனக்கு தெரியவில்லை.எடுத்துக்காட்டாக கணவனின் தம்பி சைக்கிளில் ஏற்றிச்செல்லும் அண்ணிக்கு சமூகத்தின் வசை, படிக்கிற காலத்தில் எல்லாப்பெண்களுமே எங்கள் நக்கலை கேட்டும் கேட்காமல் போகையில் ஒருத்தி மட்டும் பதிலளித்துவிட்டால் அத்தோழிக்கு நாம் வைக்கும் பெயர் என சின்ன சின்ன விடயங்களில் ஆரம்பிக்கும் எம் பாலியல் தொடர்புடுத்தலே எம் இன்றைய சமுதாய நோயாக வளார்ந்து நிற்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது.
எனக்கு தெரிந்த ஒரு பெண், தன் அயல் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்பிள்ளைக்கு பேசி வந்த வெளிநாட்டு கலியாணத்தை குழப்பி தன்மகளுக்கு அந்த திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்பதற்காக , வெளியூரில் படித்துக்கொண்டிருந்த அடுத்தவீட்டுப் பிள்ளை பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் வந்து கட்டிய கதைகளை நேரில் கேட்டிருக்கிறேன். அங்கும் பாலியல் புகார்தான். ஒரு சாதரண குடும்ப பெண் தன் எதிராளியை தாக்கும் ஒரு கருவியாக, தன் காரியம் சாதிக்க சர்வசாதாரணமாக அந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறாள் என்றால் , மிக இலகுவாக , மலிவாக அதே நேரம் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய பலம் அந்த ஆயுதத்திற்கு இருக்கிறது என்றுதானே பொருள்.
பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கோ , நிராகரிப்பதற்கோ போதிய ஆதாரம் கிடைப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் சந்தேகத்தை பாலியல் குற்றத்தை நிரூபிப்பதற்கு சாதகமாக்கி முடிவை எடுத்துவிடுகிறோம்.அதை வைத்து அலச, ஆராய துடிக்கும் எம் மனதின் வக்கிரத்திற்கு தீனியாக்கிவிடுகிறோம் என்பதே உண்மை.
இன்று இராணுவத்தில் இணைக்கப்பட்ட அந்த யுவதிகளின் நிலை. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள்.உண்மையில் அவர்கள் மனநிலையில் ஏற்பட்ட சில மாற்றங்களுக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த சிலரூடாக அறியமுடிந்த போது வேதனையாக இருந்தது. ஏற்கனவே போரில் பாதிக்கப்படிருந்த அந்த மனம் மேலும் ஒரு படி கூடுதலாக பாதிக்கப்படுவதற்கு பாலியல் இம்சைதான் காரணமாக வேண்டும் என்ற எந்த தேவையுமில்லை. அப்படி பாலியல் இம்சை செய்வதற்கு இப்படி உலகறிய ஆட்களை எடுத்துத்தான் செய்யவேண்டும் என்ற தேவையும் ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்ற உண்மையை கூட புரிந்து கொள்ளமுடியாதளவிற்கு எம் கண்களை என்ன மறைக்கிறது ? இன்றைய அவர்களில் நிலைக்கு காரணமானவர்கள் வேறு யாருமில்லை, நிச்சயமாக நாம்தான்.
அவர்களை இராணுவம் சேர்க்கும் வரை வாய் பொத்தியிருந்த நாம் , அதன் பிறகு அவர்களல்தான் எம் ஒட்டுமொத்த சமூகமுமே தலை குனிந்தாக இட்டுக் கட்டினோம். அவர்கள் குடும்பம் , சூழ்நிலை பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் எம் மனதிற்கு வந்தபடி குறை சொன்னோம், இன்று அவர்களை இந்த நிலமையில் கூட விட்டு வைக்க நாம் தயாரில்லை என்பதையே பாலியல் குற்றச்சாட்டு ஊடாக நிறுவியுள்ளோம்.என்னவென்று சொல்வது , இவை எல்லாமே எம் மனத்தின் விகாரப்பட்ட தன்மைக்கு சான்றாகின்றன என்கிறது என் மனசு. அவர்களின் இன்றைய மனநிலை பாதிப்புக்கு அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட போதே எம்மால் வைக்கப்பட்ட பாலியல் ரீதியான சந்தேக குற்றச்சாட்டு மிக முக்கியமான காரணம் என்பதை கூட நாம் ஏற்க தயாரில்லை.இன்று நேற்றல்ல நெடு நாட்களாகவே குணப்படுத்த முடியாத இந்த வியாதி எம்மை பீடித்திருக்கின்றது என்பது என்னவோ கசக்கும் உண்மைதான். இன்று எம் மொத்த சமூகத்தையுமே தலை குனிய வைத்திருக்கும் இந்த மனநிலையை நன்கு பயன்படுத்தி பிரபலம் தேட எழுத்தாளர்கள் என்று ஒரு கூட்டம், அதை வைத்து காசு பார்க்க ஊடகம் என்றொரு கூட்டமும் போட்டி போட்டு நிற்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை.
எவ்வாறு இந்த எழுத்தாளர்களால் எழுதமுடிகிறது, ஊடகங்களால் காசு பார்க்க முடிகிறது என்றால் அடுத்தவன் பூராயம் பார்க்கும் என் மனநிலைக்கு பெண்கள் பாலியல் தொடர்பிலான செய்திகள் என்றால் தேன் ஆகிவிடுகிறது. அக்கறை என்ற பேயரில் அசிங்க அசிங்கமாக எழுதுபவர்கள் ,கதைப்பவர்கள் எல்லோருடைய நம்பிக்கையுமே நாம்தான். பாலியல் தொடர்பு இல்லாமல் அப்படியே ஊடங்களும் சரி , எழுத்தாளர்களும் சரி உண்மையை உள்ளபடியே சொல்லிவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம், எங்களில் எத்தனை பேர் அதை அப்படியே நம்பிவிடுவோம் , எங்கொவொரு மூலையில் யாரோ ஒரு நாதாரி அதை பாலியல் தொடர்படுத்தி அசிங்கமாய் எழுதியிருக்கும் அதை மோப்பம் பிடித்து நாக்கை தொங்கப்போட்டு வாசிப்பதுமல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து அந்த நாயை பெரியாளாக்கிவிடுவோம். அது அக்கறை , எதிர்ப்பு அல்லது உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று எந்த பெயரிலும் இருக்கலாம்.அதுவே இன்னொரு ஊடகத்திற்கு அப்படித்தான் இப்படியான விடயங்களை காட்ட வேண்டும் என்று நாமே ஏற்படுத்திக்கொடுக்கும் எடுத்துக்காட்டாகிவிடுகிறது.
மற்றவர்களை குற்றம் சொல்வதை விட்டு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடியையையும் சரியாக வைத்தோமானால் , நாம் சார்ந்த மொத்த சமூகமுமே சரியான பதைக்கு வருவதற்கு நிறையவே சாத்தியமிருக்கிறது. முதலில் பெண்கள் தொடர்பிலான எல்லா பிரச்சனைகளையுமே பாலியல் தொடர்புபடுத்தி பார்க்கும் எம் பழக்கத்தை மாற்றிக்கொள்வோம்.
நட்புடன் கிஷோக்குமார்.
நட்புடன் கிஷோக்குமார்.