Pages

Tuesday, November 6, 2012

வெற்றிக் ‘கேடயம்’ ஆகட்டும்.

வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில்  நேற்று மாலை இடம்பெற்ற ‘கேடயம்’ விளையாட்டு சஞ்சிகையின் கொழும்பிற்கான அறிமுகவிழாவிற்கு சென்றிருந்தேன். மூத்த,முக்கியமான ஊடகவியளாலர்கள் சிலர் கலந்து சிறப்பித்திருந்தனர். சஞ்சிகை அறிமுக விழா நன்றாக இருந்தது. மிகச்சின்னதான ஆரம்பக்கட்ட குறைகள் , ஆர்வக் கோளாற்றுத்தவறுகள் என்பன இருந்தாலும்  சகோதரன் வரோதயனின் தனிமனித முயற்சியாக காண்கையில் ‘கேடயம்’ நன்றாகவேயிருக்கிறது. அவர் மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்.

இணையத்திலிருந்து எடுக்காமல் ,சஞ்சிகைக்காகவே கட்டுரைகள் ஆக்கங்கள் உருவாக்கப்பட்டன என்பதை சகோதரன் வரோதயன் சொல்கையில் மகிழ்சியாகவிருந்தது. அதிலிருக்கும் சிரமங்கள்,துன்பங்கள் நன்கறிவேன்.  எங்கள் பள்ளிக்காலங்களில் தகவல்கள் , செய்திகள் , விபரங்கள் என என்ன நல்லது கெட்டது ஆகிலும் அச்சு ஊடகங்களையே நம்பியிருந்தோம். அதனால் எம்மில் அனைவருக்குமே வாசிப்பு பழக்கம் வளர்ந்தது. ஆனால் இன்றோ அப்படியில்லை. குறிப்பாக இன்றைய சந்ததியினர் எல்லாவிடயங்களையும் இலத்திரனியல் ஊடகங்களில் மிக வேகமாகவும், மலிவாகவும் , சுருக்கமாகவும் அறிந்து விடுகின்றனர்.  அதை மீறி அவர்கள் அச்சு ஊடகங்களில் ஆர்வம் காட்டுவதில்லை, அப்படியே சிலர் ஆர்வம் காட்டினாலும் அவையும் இணையத்திலிருந்து பிரதி பண்ணியவைகளாகவே இருக்கின்றன. இளையவருக்கு  இணையத்தில் கிடைக்காத விடயத்தை அச்சு ஊடகத்தில்கொடுப்பதினூடாக குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை சிறிதளவுவேனும் அதிகரிக்கலாம்.  முக்கியமாக வாசிப்பது என்றாலே சற்று தள்ளி நின்று வியாக்கியானம் கதைக்கும் என்னோடிருப்பவரே  ‘கேடயம்’ வாசிப்பதைக்கண்டேன். அந்த வகையில் அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டும் விளையாட்டுத்துறையினூடாக வாசிப்பும் வளரும் என்றால் நிச்சயம் இரட்டிப்பு  மகிழ்ச்சியே.

விழாவிற்கான நிகழ்ச்சி தொகுப்பை செய்திருந்த சகோதரி தன் குரல் உரப்பை சற்று குறைத்திருக்கலாம். நிகழ்வின் முக்கால் பாகம் வரையில் அவரின் அறிவிப்புகள் அலறலாகவேயிருந்தன.  வழமை போல் ஒலிவாங்கி கையில் கிடைத்தால் சலிப்படைய வைப்பதற்கு ஒருவர் இருந்தார் ,நிகழ்வு அந்த குறையையும் வைக்கவில்லை. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், விழாவிற்கு அழைத்ததிற்காக அறுத்துவிட்டுப்போனார். மற்றப்படி சிறப்பு விருந்தினராக வந்தவர்களில் இலங்கை மகளீர் வலைப்பந்தாட்ட அணித்தலைவி ‘உயர்ந்த வனிதை’ தர்ஜினியின் “பிள்ளைகளை விளையாட விடுங்கள்” என்ற பெற்றோர்களுக்கான வேண்டுகோளும், யாழ் இந்துவின் முன்னால் பிரதி அதிபர் ஓங்காரமூர்த்தி ஆசிரியர் “கணத்தில் முடிவெடுக்கும் திறன் தரும் விளையாட்டு” என்பன முக்கியமாகப்பட்டன. வழமை போல தன் பேச்சு வளத்தால் கட்டிப்போட்ட  A.R.V.லோஷன் சொன்ன சினிமா மோகத்துள் புதையும் பிள்ளைகளை கண்டுகொள்ளாத பெற்றோர்,  விளையாட்டு மோகத்தினைமட்டும் ஏனோ மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டியதே.

வாசிப்பதே இல்லை , அதுவும் காசு கொடுத்து வாங்கி வாசித்தல் என்பது சந்தைப்படுத்தல் தடையாகவேயிருக்கும். சுய திருப்திக்காகவன்றி வர்த்தரீதியாக இலாபம் கண்டு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுதல் என்பது சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நட்புடன்
கிஷோக்குமார்..


2 comments:

  1. வர்த்தக ரீதியிலான வெற்றி அவசியம்..பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் , பின்னூட்டலுக்கும் நன்றி மைந்தன் சிவா.

      Delete

 

Sample text

Sample Text

Sample Text