Pages

Sunday, November 4, 2012

வழக்கு எண் :18/9

வறுமை போக்க , வயிற்றுப்பசி தீர்க்க வழி தெரியாத பெற்றோர் நிலை கண்டு இரங்கும் குழந்தை, தொழிலாளியாக மாறுகிறான். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் அத்தனையும் ஆசைகளும் பறிக்கப்பட்டு , வயசு கனவுகளை கருக்கிவிட்டு வேலைக்கு போகுமொரு கட்டாயம். எப்படியிருக்கும் அந்த பிஞ்சு மனதின் நிலை. விபரம் தெரியாத வயதில் கல்வியை உதறிந்துவிட்டு தன்னை சார்ந்தவர்களுக்கு அரை வயிறு கஞ்சியாவது ஊற்றமுடியாதா என்ற ஏக்கத்தோடு வேலைக்குச்செல்லும் அந்த பிஞ்சுக்கு மிஞ்சுவது என்னவோ ஏமாற்றந்தான். குழந்தைகளை தொழிலாளர்கள் ஆக்குவதே குற்றம் என்றிருக்கும் சட்ட நிலையில், அவர்களை மனிதர்கள் என்று கூட எண்ணாத அரக்கர்கள் பார்க்கையில் பதைக்கிறது மனசு. அரை வயிற்றிற்கு  கூட  சாப்பாடு கொடுக்காமல் வேலை வாங்கும் மிருகங்கள் மேல் கோவப்படுவதோடு மட்டும் நின்றுவிடலாகாது என்றே எண்ணத்தொன்றுகிறது. காசை மட்டுமே கணக்கு பார்க்கும் அரக்கர் கூட்டம் அந்த பிஞ்சுக்குள்ளும் ஒரு நெஞ்சிருக்கிறது என்பதை மறுத்தே  விடுகின்றன.

இன்னொரு புறம் பணம்,பதவி , பகட்டு இதெல்லாவற்றையும் வைத்து பண்ணக்கூடாதது எல்லாத்தையும் பண்ணும் ஒரு கூட்டம். ஏழை ஏழையாகவே வாழ்ந்து சாகிறான் என்பது மனித சமூதாய கட்டமைப்பில் இல்லாத சமநிலையை காட்டுகிறது.பணம் வேண்டியதெல்லாத்தையும் தரும் என்பதிலும் வேண்டாத எல்லாவற்றையும் கொண்டு வரும் என்பது ஒரு படி மேல்.

பிள்ளை ஒன்றை நல்லபடி பெற்று, வளர்த்து , வாழவைப்பது என்பது எவ்வளவு கடினமானது. அதிலும் இந்த நவ நாகரீகமான நகர வாழ்க்கை நரகமாகவேயிருக்கிறது. சிலர் நினைக்கிறோம் பெண்பிள்ளை என்றால்தால் பிரச்சனை , ஆண் பிள்ளை பிழைத்துக்கொள்வான் என்று , ஆனால் அப்படியல்ல பிள்ளைகள் எதுவென்றாலும் பிரச்சனை என்பது பொதுவானது.வருகிற பிரச்சினைக்கு ஆண் பிள்ளை , பெண் பிள்ளை என்கிற வேறுபாடு கிடையாது , பிரச்சனையின் வடிவங்கள் , வகைகள்  வேறாயிருக்கும் அவ்வளவே.

பிள்ளைகளால் பெற்றோர் எதிர்நோக்கும் பிரச்சனை என்றுமட்டுமல்லாமல் , பிள்ளைகளை விளங்கிகொள்ளாத , அல்லது விளங்கிகொள்ள விரும்பாத பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பிரச்சனையே, ஆக இது ஒரு சமூக சங்கிலியாக இருக்கிறது. வேலைப்பழு , நேரமின்மின்மை , பணப்பற்றாக்குறை போன்றவற்றால் அல்லாடும் பெற்றோரின் பிள்ளைகள் எதிர்கொள்வது ஒருவகை என்னில் , அளவுக்குமீறிய செல்வம் , செல்லம் என செல்வந்த பிள்ளைகளை வந்து சேரும் பிரச்சனைகள் வேறு . ஒட்டு மொத்தத்தில் நமது குடும்ப நிலமை, நிலவரம் எப்படியிருக்கிறது என்பதையும் தாண்டி பிரச்சனையுண்டு என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

அந்த வகையில் சமூகத்தின் அனைத்து மட்டத்திலானவர்களினது வாழ்வியலையும் இரண்டரை மணி திரையுள் கொண்டுவரமுடியாவிட்டாலும் . நான்கு விதமான சமூக மட்டத்தினை எடுத்து அவர்களுக்குரித்தான பிரச்சனை காரணிகளில் சிலவற்றை மாத்திரம் தெளிவாக அலசி எந்த குழப்பமும் இல்லாமல் எங்கள் பார்வைக்கும் தந்த இயக்குநருக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டும். இயக்குநர் பலாஜி சக்திவேல் இதற்காக எடுத்துக்கொண்ட காலம் அதிகமாகயிருந்தாலும் கடைசியில் தந்தது என்னவோ நல்ல பொருள்தான். தயாரிப்பாளர் லிங்குசாமியின் படைப்புகள் வர்த்த ரீதியில் வென்றனவோ இல்லையோ என் போன்றவர்களின் மனங்களை வெல்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த படமும்.

நீண்ட நாட்களின் பின் யதார்தம் தழுவிய படமொன்று பார்த்த மகிழ்ச்சி.

நட்புடன்
கிஷோக்குமார்.



0 comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text